கொரோனாவால் ஏற்படப் போகும் பொருளாதார சரிவில் இருந்து நடுத்தர வர்க்க மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?

கொரொனா வைரஸ் மனித வரலாற்றில் மாபெரும் உயிர் சேதத்தையும் பொருளாதாரச் சரிவையும் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பயணம் செய்வதையும், உணவகங்களுக்குச் செல்வதையும், ஷாப்பிங் செய்வதையும் நிறுத்தும்போது, வணிகங்கள் அவற்றின் விற்பனை வீழ்ச்சியடைவதைப் பார்க்கும்போது, பொருளாதாரம் நிச்சயமாக வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

நம் நாட்டின் மக்கள் தொகையில், உயர் வகுப்பினர் – 20%, நடுதர வகுப்பினர் 50 – 60% மற்றும் விளிம்புநிலை வகுப்பினர் 20 – 30% ஆக உள்ளனர். இதில் உயர் வகுப்பு மக்களின் பொருளாதாரத்தில் தொய்வு மட்டுமே ஏற்படும், வேறு சிக்கல் எதுவும் பெரிதாக அவர்கள் வாழ்வில் ஏற்படாது. விளிம்புநிலை மக்கள் அவர்களுடைய வாழ்வை அன்றாட வருமானத்தில் சந்திப்பதால் சிறிதளவு இழப்புகளுடன் வெகு விரைவில் மீண்டு விடுவார்கள். இச் சரிவில் பெரிதும் பாதிக்கப்பட உள்ளவர்கள் நடுத்தர வர்க்கத்தினரே, வேலை இழப்பு / தொய்வு, பணவீக்கம், கைமீறும் செலவுகளுக்கிடையில் தத்தம் வாழ்க்கை கனவுகளும், அதற்கான நிதி கடமைகளும் இருப்பதால் நான்கு திசைகளிலும் சூறாவளியாக சுற்றியடிக்கும். இச்சரிவில் இருந்து எவ்வாறு தங்களை பொருளாதார முறையில் சீர்செய்து, மீள்வது என்பதற்கான எனது பரிந்துரைகள்.

வீட்டுக் கடன்

இவ்வுலகில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் சொந்த வீடு என்பது, ஆகப்பெரும் கனவு ஆகும். அவ்வாறு நீங்கள் வீடுக்கான கடன் பெற்றிருந்தால் i) வீட்டுக்கடனுக்கான கால வரம்பை அதிகபட்ச நீட்டிப்பு செய்வதால், உங்களின் மாதத்தவனைக்கான தொகை குறைந்துவிடும். சரிவில் இருந்து மீண்டு எழுந்த பின், உங்கள் கைகளில் கூடுதல் தொகை இருக்கும்பட்சத்தில் நீங்கள் செலுத்தும் கூடுதல் தொகையானது மாதத்தவனை போக அசலில் கழித்துக்கொள்ளப்படும். இதன் மூலம் திட்டமிட்ட தவணை காலத்திற்கு முன்பே கடனை அடைத்து விடுவீர்கள். இச்சேவை முற்றிலும் இலவசமே. ii) இயன்றவரை உங்களது வீட்டுக்கடனை பாரத வங்கி / HDFC வங்கிக்கு மாற்றிக் கொள்ளுங்கள், வட்டி விகிதம் மிகக்குறைவு மற்றும் கால அளவும் அதிகம் என்பதால் உங்களது மாதத்தவனையின் தொகை குறையும்.

செலவுகள்

வருமானத்தில் வைக்கின்ற கவனத்தை, செலவுகளில் நாம் எப்போதும் வைப்பதில்லை. தனிநபர் செலவுகள் இரண்டு வகைப்படும், அத்தியாவசிய செலவு மற்றும் ஆடம்பரச் செலவு. அத்தியாவசிய செலவுகளான உணவு, கல்வி கட்டணம், வீட்டு வாடகை / மாதத்தவனை ஆகிய பலவற்றை முயன்றளவு குறைத்துக் கொள்ளுங்கள். ஆடம்பரச் செலவுகளான பொழுதுபோக்கு, விலை உயர்ந்த ஆடைகள், வாரயிறுதி பொழுதுபோக்கு மற்றும் உணவு ஆகிய பழக்கவழக்கங்களை குறைப்பதற்க்கோ அல்லது தவிர்பதற்க்கோ பழகிக்கொள்ளுங்கள்.

அவசரகால நிதி

நிதி திட்டமிடல் என்பது, பொருள் ஈட்ட தொடங்கும் ஒவ்வொரு தனிநபரும் முதன்மையாக கடைபிடிக்க வேண்டிய செயலாகும். நம் நாட்டில் கடன் சூழ்நிலைக்கு தள்ளப்படுவோரில் பெரும்பகுதியினர் தங்கள் வாழ்க்கைக்கான அவசரகால தேவைகளுக்கு திட்டமிடாததே ஆகும். அவசரகால நிதி என்பது ஏதாவது அசாதாரன சூழ்நிலை ஏற்படும்பட்சத்தில் அதை சமாளிப்பதற்க்காக சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டிய தொகையாகும். குறைந்தது 3 – 6 மாதத்திற்கான குடும்ப செலவுத் தொகையினை ரொக்கமாகவோ அல்லது வங்கியில் சேமிப்பு கணக்கிலோ சேர்த்து வைத்துக் கொண்டு, அசாதாரன சூழ்நிலை ஏற்பட்டால் மட்டும் இத்தொகையினை செலவழிக்க கற்றுக் கொள்ளுங்கள். தொடர் வைப்பு (RD) கணக்கு மூலம் எளிதாக 1 – 2 வருடத்தில் தேவையான தொகையினை சேமித்து கொள்ள முடியும்.

நிதி திட்டமிடல்

குடும்பத்தின் வருமானத்திற்குள் செலவுகளை உள்ளடக்கி, சேமிப்பிற்க்கு வழிவகை செய்து அதன் பொருட்டு் வாழ்வை வழிநடத்துவதே நிதி திட்டமிடல் ஆகும். நிகழ்காலத்தின் தேவைகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல் வருங்கால தேவைகள், வாழ்க்கை கனவுகளின் பட்டியல், அதற்கான தொகை மற்றும் கால அவகாசம் ஆகியவற்றை குறித்துக் கொண்டு, அதை நடைமுறைப்படுத்த பழகிக் கொள்ளுங்கள். ஏற்கனவே திட்டமிட்டு அதன் படி வாழ்பவர்கள், இனிவரும் சரிவை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றார்போல் உங்கள் திட்டமிடலை மாற்றி அமைத்துக் கொள்வது நல்லது. அத்தியாவசிய செலவுகளை குறைபதற்கான வழிவகைகளை ஆராய்ந்து, ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து, நிதி திட்டமிடலின் அவசியத்தை உணர்ந்து வாழ்வை கட்டமைத்துக் கொள்வதே இன்றைய சூழலுக்கு இன்றியமையாததாகும்.

கூடுதல் வருமானம்

மாறிவரும் இன்றைய வாழ்கை சூழலில் ஒற்றை வருமானம் என்பது கயிற்றின் மீது நடப்பது போல் ஆகும், கரணம் தப்பினால் மரணம் என்னும் நிலை. பகுதி நேர வேலை, கணவன் மனைவி இருவரும் பொருள் ஈட்டுவது, வீடு / கடை / வியாபாரம் / விவசாய வருமானம் என்று கூடுதல் வருமானத்திற்கு வழிவகை செய்து கொள்வதே சிறந்தாகும். முதன்மை வருமானமாக ஒன்றும், கூடுதலாக ஒன்றோ அல்லது அதற்க்கு மேற்பட்ட வருமானமோ இருந்தால் மட்டுமே இன்றய கால கட்டதில் எந்தவொரு மத்திய வர்க்க குடும்பமும் அவர்களது வாழ்வை சிக்கலின்றி வாழ முடியும்.

உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க உள்ளபோதிலும், நமது நாடு சந்திக்க உள்ள சரிவு சற்றே வேறுபட்டதாகும். திட்டமிடப்படாத பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குளறுபடி, பொருளாதர மந்தநிலை, மதக்கலவரங்கள், ரூபாயின் விழ்ச்சி என அடுத்தடுத்து நாம் சந்தித்த சிக்கல்களுக்கு மத்தியில் கொரோனாவினால் ஏற்படப்போகும் நிகழ்வுகள் ஆழிப்பேரலையாகவே நம்மை சூழ்ந்துத் தாக்கும். மிகத் துள்ளியமான பொருளாதார திட்டமிடல் இல்லையெனில், மீண்டெழுவது சாத்தியமில்லை. மேற்குறிப்பிட்டுள்ள கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு, உங்களின் சுய சிந்தனையின் பொருட்டு, உங்கள் குடும்பச் சூழலுக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுத்து இயன்றவரை இச்சரிவில் இருந்து 2 – 3 ஆண்டுகளில் விடுபடுவதே சாலச் சிறந்தது.

NeatArticles.com
Logo
Enable registration in settings - general